Published : 02 Dec 2024 12:35 PM
Last Updated : 02 Dec 2024 12:35 PM
கடலூர்: கடலூர் தென் பண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் முத்தையா நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் பொழுது , காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1, 70,000 கன அடி, சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் பகுதி தென் பெண்ணை யாற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று( டிச.2) காலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தென்பெண்ணை ஆற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் , கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, விருத்தாசலம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் ரஜினிகாந்த் மற்றும் வருவாய்த்துறை நீர்வளத்துறை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள ஆல்பேட்டை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர், திடீர் குப்பம் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் முத்தையா நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் பொழுது, காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ள மீட்பு பணி நடவடிக்கையை செய்திட அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் உள்ள கல்வெர்ட் பாலம் வழியாக அதிகப்படியாக வெளியேறிய வெள்ள நீர் தனலட்சுமிநகர், கே டி ஆர் நகர், திடீர்குப்பம் ,இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் புகுந்தது. இந்த வெள்ள தண்ணீரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மேற்பார்வையில் காவல்துறையின் விரைவு படையினர் இரும்பு பலகை கொண்டு அடைத்தும், மணல் முட்டைகளை அடுக்கியும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT