Published : 02 Dec 2024 12:25 PM
Last Updated : 02 Dec 2024 12:25 PM
விழுப்புரம்: “எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பதில்லை,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் மயிலம் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து திண்டிவனத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு கன மழையால் சிறு பாலங்களில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வீடுர் அணை அருகில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மற்றும் மணிலா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த பகுதிகளை வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மூலம் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் மற்றும் கனமழையால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் இந்த அரசு முறையாக உரிய அதிகாரிகளின் மூலம் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். சென்னை மாநகரத்தில் 7 சென்டிமீட்டர் மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழை. இதனால் ஐந்தாறு மணி நேரத்தில் மழை நீர் வடிந்துவிட்டது. ஆனால் இந்த ஊடகங்கள் அதை மிகைப்படுத்தி பேசுகிறது.
சென்னை மாநகரத்தில் இந்த அரசின் முயற்சியால் மழைநீர் வடிந்ததாக பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். ஊடகத்தின் வாயிலாக பொய்யான தவறான செய்திகளை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக மக்களுக்கு ஏற்படுகிற பிரச்சினையை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றோம்.
நான் என் கடமையை தான் செய்கிறேன் ஆனால் ஆளுங் கட்சியின் முதல்வர் அதற்கு உரிய பதில்கள் அளிப்பதில்லை. இன்றைக்கு இருக்கிற முதல்வர் நாங்கள் கூறும் பிரச்சினையை தீர்க்க முடியாத ஒரு முதல்வர். எதிர்க்கட்சி சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகளை சரியான முறையில் புரிந்து கொண்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தான் ஓர் நல்ல அரசு. ஆனால் அதை இந்த அரசு செய்வதில்லை.
20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் கூட சென்னையில் ஒரு துளி நீர் தேங்காது என்று கூறிய நிலையில், இரண்டு வருடம் ஆகியும் சென்னையில் எந்தவித வடிகால் பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கனமழை பெய்யும் போதெல்லாம் சென்னை மக்கள் பாதிப்படைகின்றனர். உலக வங்கி திட்டம், பன்னாட்டு நிதி திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்த வடிகால் பணிகள் அதிமுகவால் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது 1,840 கிலோமீட்டர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் ஒரு ஆண்டில் இரண்டு முறை மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்த அரசாங்கம் அதிமுக, என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT