Published : 02 Dec 2024 06:34 AM
Last Updated : 02 Dec 2024 06:34 AM
காஞ்சிபுரம்/குன்றத்தூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் மொத்தம் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில் 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 163 ஏரிகள் 75 சதவீதமும், 160 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நீர் நிரம்பியுள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 78 ஏரிகள் 75 சதவீதமும், 124 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பியுள்ளன.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மேலும் சில ஏரிகள் விரைவாக நிரம்பும் நிலை உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 6.00 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 20.07 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.
நீர்வரத்து மணிக்கு 4,217 கன அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2,621 மில்லியன் கன அடிநீர் உள்ளது. அதேசமயம் ஏரியிலிருந்து 131 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும்போது பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
மழைநீர் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் ஆகியவை சேர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,155 ஏரிகளில் நேற்று காலை நிலவரப்படி, 231 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், நீர்வளத் துறையின் கீழ் உள்ள 574 ஏரிகளில் 154 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில் 77 ஏரிகளும் முழுமையாக நிரம்பி வழிகின்றன.
மேலும், மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில் 263 ஏரிகள் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 3,296 குளம், குட்டைகளில் 516 குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 706 குளம், குட்டைகளில் 75 சதவீதம் நீர் இருப்புள்ளது என,மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT