Last Updated : 02 Dec, 2024 09:30 AM

 

Published : 02 Dec 2024 09:30 AM
Last Updated : 02 Dec 2024 09:30 AM

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு - ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு

மழை நீரில் மூழ்கிய போச்சம்பள்ளி காவல் நிலையம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் வெள்ளக்காடானது. பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து இன்று காலை வரை இடைவிடாத மழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று (டிச.2) காலை 7 மணி நிலவரப்படி 50 செ.மீட்டர்( 503 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது. இதனால், ஊத்தங்கரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளது. குறிப்பாக, ஊத்தங்கரை - திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரி் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாடகைக்காக நிறுத்தப்பட்டிருந்த கார், மினிவேன்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதியுற்று வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்பி தங்கதுரை ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

துணை ஆட்சியர்கள் தலைமையிலான குழு: இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, “ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிளில் நேற்று இரவு பெய்த கனமழையால் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட ட்ராவல்ஸ் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பேரிடர் மீட்பு குழு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்சார துறை காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை நீர் நிலை உள்ள பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாழ்வான பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்க கூடாது.

கனமழை தொடர்பாக தாலுகா அளவில் துணை ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றும் பணிகளிலும், நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்களை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் இணைந்து அகற்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.” என்றார்.

நீரில் மூழ்கிய காவல் நிலையம்: இதே போல், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 25 செ.மீட்டர் (250 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது. போச்சம்பள்ளி அருகே உள்ள கோணணூர் ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் வெளியேறி ஊருக்குள் வெள்ளப்பெருக்கெடுத்தால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால், தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரியின் உபரிநீர் போச்சம்பள்ளி காவல் நிலையம், 4 சாலையில் உள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது. மேலும், போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி, திருப்பத்தூர், சிப்காட் செல்லும் 3 சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை அலுவலர்கள், போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காட்டாகரம் பெரிய ஏரி, கங்காவரம் ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆறு கடந்து செல்லும் பாதையில் உள்ள விளைநிலங்கள் மூழ்கி செல்வதால், பயிர்கள் நாசமானது.

தொப்படிகுப்பம் பழங்குடியின காலனியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்டவர்களை வருவாய்த்துறை அலுவலர்கள் மீட்டு, வெப்பாலம்பட்டி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்களை அலுவலர்கள் மீட்டு, அந்தந்த மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழையளவு: இன்று (2-ம் தேதி) காலை 7 மணி நிலவரப்படி மழையளவு ஊத்தங்கரையில் அதிகப்பட்சம் 50.30 செ.மீட்டரும், போச்சம்பள்ளியில் 25 செ.மீ, பாம்பாறு அணை 20.50, பாரூரில் 20.20 செ.மீ, பெணுகொண்டாபுரம்18.90 செ.மீ, நெடுங்கல் 14.02 செ.மீ, கிருஷ்ணகிரி 10.80 செ.மீ, கிருஷ்ணகிரி அணை 9.80 செ.மீ, மழை பதிவாகி உள்ளது.

விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை 587 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அணைக்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீர், ஆண்டியப்பனூர் அணைக்கட்டு மூலமாகவும் தண்ணீர் வருகிறது. இதே போல், பெணுகொண்டாபுரம் ஏரியில் மூலம் வரும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரும், நீர் ஆதராமாக உள்ளது.

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று(2-ம் தேதி)காலை 5 மணியளவில் 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடியில் நீர்மட்டம் ஏற்கனவே 18.6 அடியாக இருந்ததால், அணையின் பாதுகாப்பினை கருதி, 5 மதகுகள் வழியாக 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர், அனுமன்தீர்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலந்து சீறி பாய்ந்து ஓடுகிறது. பாம்பாறு அணையில் 20.50 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x