Published : 02 Dec 2024 09:18 AM
Last Updated : 02 Dec 2024 09:18 AM
சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விரைவு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென், மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த பெரும்பாலான ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இன்று தென் மாவட்டங்களுக்கு புறப்பட வேண்டிய பகல் நேர விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து உள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக, விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தை ஒட்டி மழை நீர் அளவு அபாயக் கட்டத்தை எட்டியது. இதன்காரணமாக, இப்பாலம் வழியாக ரயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 36 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
முழுமையாக ரத்து: சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு இன்று காலை இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூர் - மதுரைக்கு இன்று காலை இயக்கப்பட வேண்டிய தேஜஸ் விரைவு ரயில் (22671), சென்னை எழும்பூர் - புதுச்சேரிக்கு இன்று காலை இயக்கப்பட வேண்டிய மெமு விரைவுரயில் (06025), சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளிக்கு இன்று காலை புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில் (22675), விழுப்புரம்- தாம்பரத்துக்கு புறப்பட வேண்டிய மெமு பாசஞ்சர் ரயில் (06028), புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு இன்று காலை புறப்பட வேண்டிய விரைவுரயில் (16116) ரத்து செய்யப்பட்டது.
சென்னை - எழும்பூர் - குருவாயூருக்கு இன்று காலை 9.45 மணிக்கு இயக்கப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் வைகை விரைவு ரயிலும், காரைக்குடி புறப்படும் பல்லவன் விரைவு ரயிலும் ரத்துசெய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பிவிடப்பட்ட ரயில்கள்: தஞ்சாவூர் - சென்னை எழும்பூருக்கு நேற்று இரவு புறப்பட்ட உழவன் விரைவு ரயில் (16866), மன்னார்குடி - சென்னை எழும்பூருக்கு நேற்று இரவு புறப்பட்ட மன்னை விரைவு ரயில் (16180) ஆகிய ரயில்கள் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பிவிடப்பட்டன.
செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்ல வில்லை. கன்னியாகுமரி - சென்னை எழும்பூருக்கு நேற்று மாலை புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில் (12634), மதுரை - சென்னை எழும்பூருக்கு நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் விரைவுரயில் (12638) ஆகிய ரயில்கள் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பிவிடப்பட்டன.செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக செல்லவில்லை
இதுபோல, திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட நெல்லை, முத்துநகர் ஆகிய விரைவுரயில்களும் விழுப்புரம், காட்பாடிவழியாக சென்னை எழும்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. காரைக்கால் - தாம்பரத்துக்கு நேற்று இரவு புறப்பட்டவிரைவுரயில் (16176), விழுப்புரம் , காட்பாடி, சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்துக்கு திருப்பிவிடப்பட்டது. செங்கோட்டை - தாம்பரத்துக்கு நேற்று புறப்பட்ட சிலம்பு விரைவுரயில் (20682), விழுப்புரம், காட்பாடி, எழும்பூர் வழியாக திருப்பிவிடப்பட்டது. அதேநேரத்தில், அரக்கோணம், பெரம்பூரில் நின்றுசெல்ல சிறப்பு நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது.
பாதியில் நிறுத்தம்: காக்கிநாடா - புதுச்சேரிக்கு நேற்று மதியம் புறப்பட்ட விரைவு ரயில் (17655), கச்சிகுடா - புதுச்சேரிக்கு நேற்று மாலை புறப்பட்ட விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்பட உள்ளது. தென், மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 13 விரைவு ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. 14 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 7 விரைவு ரயில்கள் வரும் வழியில் உள்ள நிலையங்களில் நிறுத்தப்பட்டன. தென, மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT