Published : 02 Dec 2024 06:14 AM
Last Updated : 02 Dec 2024 06:14 AM

மக்​கள்​ நல அரசுக்​கான தகு​தி​யை தமிழக அரசு இழந்​து வருகிறது: சிஐடி​யு கடும்​ ​விமர்​சனம்​

சென்னை: மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது சமூக வலைதள பதிவு: ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வு வழக்கில் கோவை அலுவலர் சங்கம் பெற்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்துள்ளனர்.

அகவிலைப்படி உயர்வை மறுக்க பல கோடி செலவு செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை மிகவும் கொடூரமானது. மூத்த குடிமக்களை பாதுகாப்பதற்கான சட்டமெல்லாம் உள்ள ஒரு நாட்டில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அரசு தன்னிடம் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைத்து வருகிறது.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து இரக்கமற்ற முறையில் நடந்து கொள்வதைப்போல் தமிழக அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மீது ஏகாதிபத்திய மனநிலையில் பொருளாதார வன்முறையை அரங்கேற்றி வருகிறது. தமிழக அரசு மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை இழந்து வருகிறது.

சட்டப்பேரவையில் ஒரு முறை, "தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வந்தால் மேல்முறையீடு செய்யும் அற்ப புத்தி இந்த அரசுக்கு கிடையாது" என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். பலமுறை நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் மேல்முறையீட்டை தொடர்ந்து செய்யும் இந்த அரசு கருணாநிதியின் பெயரை சொல்வதற்கும் தார்மீக ரீதியான உரிமை உண்டா என்பதை சிந்திக்க வேண்டும்.

அரசை பொது வெளியில் அம்பலப்படுத்துவதன் மூலம் அரசின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் நமது உரிமைகளை வென்று காட்ட வேண்டும். ஒரு புறத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மீது பொருளாதார வன்முறையை தொடுக்கிறது. மறுபுறத்தில் பணியில் உள்ள ஊழியர்களின் நியாயங்களை காலில் போட்டு மிதிக்கிறது. அரசின் அநீதிக்கு முடிவு கட்ட சென்னையில் அணி திரள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x