Published : 02 Dec 2024 06:05 AM
Last Updated : 02 Dec 2024 06:05 AM
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேற்றும் தீவிரமாக மேற்கொண்டது. பட்டாளம் பகுதியில் 2 நாட்களில் மழைநீரை வடிய செய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி நிர்வாகம் 3 நாட்களாக அகற்றி வருகிறது. வெள்ளநீரை அகற்றும் பணியில் 100 குதிரைத்திறன் கொண்ட 137 நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 1,686 நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டிராக்டர்கள் மூலம் இயக்கப்படும் 484 நீர் இறைக்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றும் பல இடங்களில் மழைநீர் தேக்கம் நீடித்தது.
குறிப்பாக வட சென்னை பட்டாளம் அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட நீலாங்கரை கஜ்ரா கார்டன், ஈஞ்சம் பாக்கம் ராயல் என்கிளேவ், அனுமன் காலனி, உத்தண்டி பாரதி அவென்யூ, காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலை, மணலி மண்டலம் நேரு நகர் தெருக்கள், கோடம்பாக்கம் கோபாலமேனன் சாலை - அக்பராபாத் தெரு, சேத்துப்பட்டு - தாஸ்புரம், அரும்பாக்கம் பெரியார் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று பிற்பகல் நிலவரப்படி, சென்னையில் மழைநீர் தேங்கிய 341 இடங்களில், 292 இடங்களில் உள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 49 இடங்களில் தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 22 சுரங்கப்பாதைகளில் நேற்று எங்கும் மழைநீர் தேக்கம் இல்லை. 2 நாட்களில் மழைநீர் தேக்கம் உள்ள பகுதிகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நேற்று 200 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. மெரினா வளைவு சாலையில் புயலால் படிந்த கடல் மணல் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
பட்டாளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களில் அங்கு வெள்ளம் வடிந்துவிட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் 17 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் மூலமாக சுமார் 300 நடைகள் இயக்கி, நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மொத்தம் 600 குதிரைத் திறன் கொண்ட 6 ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்கல் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகுந்த மழைநீரும் வெளியேற்றப்பட்டு, நேற்று வழங்கம்போல் இயங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT