Published : 02 Dec 2024 04:22 AM
Last Updated : 02 Dec 2024 04:22 AM
சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 90 கி.மீ. வேகத்தில் காற்றுதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சம் 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசியுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி (நேற்று) காலை முதல் புதுச்சேரி அருகே புயலாக நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ. திருக்கனூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ. செம்மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்புரத்தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று (டிச.2) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்பு உள்ளது.
நாளை (டிச.3) மேற்கண்ட மாவட்டங்களிலும் (திருச்சி, மதுரை நீங்கலாக), திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை இல்லாத அளவாக... புதுச்சேரியில் முதன்முதலாக 1971-ம் ஆண்டு மழை மானி நிறுவப்பட்டது. அப்போது முதல் புதுச்சேரியின் மழையளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த தரவுகளின்படி கடந்த 1978-ம் ஆண்டு நவ.4-ம் தேதி பதிவான 32 செமீ மழை அளவே, புதுச்சேரியில் பதிவான அதிகபட்ச மழை அளவாக இருந்தது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 49 செமீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 2011-ம் ஆண்டு தானியங்கி மழைமானி நிறுவப்பட்டு, தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை பதிவான மழை அளவுகளில் அதிகபட்சமாக கடந்த 2017-ம் ஆண்டு டிச.2-ம் தேதி 14 செமீ மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில் அங்கு தற்போது 51 செமீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மழை பாதிப்புகளும், மீட்புப் பணிகளும்: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. புதுச்சேரி நகரின் மைய பகுதியான வெங்கடா நகர், தென்றல் நகர், சாரம் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து தனி தீவுகள்போல மாறியுள்ளன. கடலூர் - புதுச்சேரி சாலையில் தண்ணீர் ஆறுபோல ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை படகு மூலம் மீட்டனர். மீட்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை காரிசன் பட்டாலியன் பிரிவை சேர்ந்த இந்திய ராணுவ படையினர் புதுச்சேரி வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர், ஜீவா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்திய கடலோர காவல் படையினர், பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வம்புபட்டு ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால், புதுச்சேரி - விழுப்புரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்கின்றன.
இதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக சுமார் 30 மணி நேரமாக மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியதால் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் மழை நீர் புகுந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்புபடையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீட்பு நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
விழுப்புரம், கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மயிலம், திண்டிவனத்தில் மழை பாதிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT