Published : 01 Dec 2024 09:36 PM
Last Updated : 01 Dec 2024 09:36 PM

புதுச்சேரி, விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமையைப் பொறுத்தவரையில், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சம் 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசியுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் புதுச்சேரி அருகே புயலாக நிலை கொண்டது.

இதன் காரணமாக புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ., புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ., திருக்கனூரில் 43 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ., நேமூரில் 35 செ.மீ., புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ., செம்மேடில் 31 செ.மீ., வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ., விழுப்புரத்தில் 27 செ.மீ., செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரி அருகே நிலைகொண்ட புயல், மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவக் கூடும். இதன் காரணமாக, திங்கள்கிழமை (டிச.2) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. செவ்வாய்க்கிழமை (டிச.3) மேற்கண்ட மாவட்டங்களிலும் (திருச்சி, மதுரை நீங்கலாக), திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இரு தினங்களுக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அவர் கூறினார்.

வரலாறு காணாத மழை: புதுச்சேரியில் முதன்முதலாக 1971-ம் ஆண்டு மழை மானி நிறுவப்பட்டது. அப்போது முதல் புதுச்சேரியின் மழையளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த தரவுகளின்படி கடந்த 1978-ம் ஆண்டு நவ.4-ம் தேதி பதிவான 32 செமீ மழை அளவே, புதுச்சேரியில் பதிவான அதிகபட்ச மழையளவாக இருந்தது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 49 செமீ மழை பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 2011-ம் ஆண்டு தானியங்கி மழைமானி நிறுவப்பட்டு, தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை பதிவான மழை அளவுகளில் அதிகபட்சமாக கடந்த 2017-ம் ஆண்டு டிச.2-ம் தேதி 14 செமீ மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில், அங்கு தற்போது 51 செமீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பாதிப்புகள்: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் பல சாலைகள் நீரில் மூழ்கின. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதையொட்டி புதுவை கடலில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருந்தது. புதுச்சேரியே வெள்ளக்காடாக மாறியது. பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கடுத்து ஓடியது. பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரங்கள் மின் ஒயர் மீது சாய்ந்தன. மின் கம்பங்களையும் அவை பதம் பார்த்தன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் புகுந்த மழை வெள்ளம் நீர்.

பலத்த காற்றாலும், புயல் எச்சரிக்கையாலும் அசம்பாவிதத்தை தவிர்க்க மின்துறையினரால் சனிக்கிழமை மாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரப்பகுதி இருளில் மூழ்கியது. 24 மணி நேரம் புதுச்சேரியில் மின்சாரம் இல்லை. மரப்பாலம், வெங்கட்டா நகர் துணைமின் நிலையங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதுதான் மின் விநியோகம் தராததற்கு காரணம் என்று மின் துறையினர் தெரிவித்தனர். அவை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் நகரப்பகுதிகளில் மின் விநியோகம் படிப்படியாக சீராக தரப்பட்டு வருகிறது.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் நெல்லித்தோப்பு சாலையில் கொட்டும்
மழையில் தத்தளித்து வரும் வாகனங்கள்.

புயல் எச்சரிக்கை காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தொடர் மழையால் குடியிருப்புகள் பலவும் நீரில் மூழ்கின. வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், ஜீவா நகர் உட்பட நகரின் பல பகுதிகளிலும் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. ஏற்கெனவே நிவாரண முகாம்கள் நிரம்பிய நிலையில் பல குடியிருப்புகளில் தரைத்தளத்தில் இருந்தோர் மேல்தளத்துக்கு சென்றனர்.

குடைகளைப் பிடித்து இழுக்கும் பலத்த சூறைக்காற்று. இடம்: பெரியார் நகர்

புதுச்சேரி பகுதியிலுள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்லும் பெரிய வாய்க்காலான உப்பனாறு நிரம்பி வழிகிறது. இதையொட்டியுள்ள கோவிந்தசாலை, திடீர் நகர், கென்னடி நகர், வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், மழை தொடர்வதாலும் வெள்ளநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தந்தை, தாய், குழ்ந்தையும் மூன்று பேரும் பொக்லீன்
வாகனத்தில் வருகின்றனர்.

ஜிப்மர் சாலை, செஞ்சி சாலை தொடங்கி பல பகுதிகளில் வேரோடு மரங்கள் சாலைகளில் சாயந்தன. புதுச்சேரி ஆட்சியர், நகராட்சி ஆணையர்கள், அரசு ஊழியர்கள் களம் இறங்கினர். மரங்கள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் உணவு ஏற்பாட்டை மேற்கொண்டாலும், பல பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகின்றனர். கனமழை வெள்ளம் காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்தார்.

விழுப்புரம் பாதிப்புகள்: விழுப்புரம் மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை கிராமத்தில் வெள்ளம் சூழந்துள்ளதால் அக்கிராம மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். திண்டிவனம் - மரக்காணம் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அதிகன மழையால் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வங்கக் கடலில் கடந்த 4 நாட்களாக அனைவருக்கும் போக்கு காட்டி அமைதியாக இருந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது நின்று பேசி தன் கோரத்தாண்டவத்தைக் காட்டிவிட்டது. அந்த அளவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டி தீர்த்துள்ளது.

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீட்டர் அளவிற்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது. விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்பு பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விழுப்புரம் நகரத்தை பொறுத்த வரை எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. விழுப்புரம் நகரில் உள்ள கெளதம் நகர், ஸ்ரீராம் நகர், சுபஸ்ரீ நகர், சுதாகர் நகர், சேலைமஹால் பின்புறம் உள்ள விஐபி கார்டன், மகாராஜபுரம் தாமரைக்குளம், ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சுதாகர் நகர், ஆசாகுளம், சுமையா கார்டன், ஹைவேஸ் நகர், ராஜேஸ்வரி நகர், சரஸ்வதி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருச்சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதோடு, வாகனங்களும் மூழ்கியதால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அத்திவாசிய தேவைக்கான குடிநீர் கிடைக்காமல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x