Published : 01 Dec 2024 09:11 PM
Last Updated : 01 Dec 2024 09:11 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயலைத் தொடர்ந்து புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் மக்கள் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்ததாக புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். புதுவை கோவிந்தசாலை முடக்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). ஆட்டோ ஒட்டுநரான இவர் வாடகை வீட்டில் அவரது தாயார் சீதா (80) வசித்து வந்தார். இவர் வசிக்கும் பகுதிக்கு உப்பனாறு வாய்க்காலில் இருந்து வெளியேறி வெள்ளநீர் புகுந்தது.
அவரின் வீட்டில் புகுந்த மழைநீரில் முருகேசன், சீதா ஆகியோர் சிக்கித்தவிப்பதாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் பெரியகடை போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸார் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு அவர்களை பரிசோதித்தபோது முருகேசன் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. சீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசித்த 50 வயது மதிக்கத்தக்க நபரும், முதலியார்பேட்டை தியாகுமுதலியார் நகர் பகுதியில் 57 வயது பெண்ணும், மேட்டுப்பாளையம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபரும் உயிரிழந்தனர்.
அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பலியானவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு இறந்தவர்களின் முழு விவரம் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT