Published : 01 Dec 2024 05:12 PM
Last Updated : 01 Dec 2024 05:12 PM
மதுரை: மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் இருந்து ஒருபிடி மண்ணை கூட, எடுக்க அனுமதிக்கமாட்டோம் என, மதுரை எம்பி. சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்லவேண்டும்.
இந்நோக்கத்தை உறுதி செய்ய மத்திய அரசு சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது மத்திய அரசின் சுரங்கங்கள் அமைச்சகம். இதன்மூலம் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் லிலிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்பதை மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் தெளி தெளிவாக கூறியுள்ளது.
தமிழ், தமிழர் வரலாற்றின் பெருமையான அடையாளங்கள், உயிர்ப்பன்மைய வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய இடம்தான் இந்த கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயிலாகவும், நேரில் சந்தித்தும் விளக்கிய பிறகும் மத்திய அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது.
தமிழ் மற்றும் தமிழர் உணர்வுகளையும் உரிமையும் துச்சமென மதிக்கும் பாஜக அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும். அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.
பாஜக அரசு கூறுவது போன்று தொல்லியல், கலாச்சாரம், இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது. அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT