Published : 01 Dec 2024 02:29 PM
Last Updated : 01 Dec 2024 02:29 PM
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் மற்றும் பெருமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் பார்வையிட்டார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் புதுச்சேரி பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று நேரில் பார்வையிட்டார்.
புதுச்சேரி கடற்கரை சாலை, வைத்திகுப்பம் கடற்கரை பகுதி, தேங்காய்திட்டு துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனூர் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.
மேலும் கனகன் ஏரியைப் பார்வையிட்டார். அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தலைமை கண்காணிப்புபப் பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரியில் உள்ள துணைமின் நிலையங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை அறிந்து அது பற்றிய விவரங்களை துணைநிலை ஆளுநர், அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கனகன் ஏரியைப் பார்வையிட்டவர் அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். அந்த உணவினைச் சுவைத்து பார்த்தார். அப்போது எம்.எல்.ஏ ஏ.கே.டி ஆறுமுகம் உடன் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை லாஸ்பேட்டையில் உள்ள மாநில அவசரகால உதவி மையத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலர் சரத் சவுகான், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துணைநிலை ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், டிஐஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT