Published : 01 Dec 2024 03:08 AM
Last Updated : 01 Dec 2024 03:08 AM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்பினார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார்.
உதகை ராஜ்பவனில் தங்கியிருந்த அவர், கடந்த 28-ம் தேதி முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை நீலகிரி மாவட்டத்தில் வாழும் 6 வகையான பண்டைய பழங்குடியின மக்களை உதகை ராஜ்பவனில் சந்தித்தார். அப்போது, பழங்குடியின மக்கள் அமைத்திருந்த அரங்குகளில் இருந்த, பழமையான பொருட்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும், பழங்குடியின மக்களின் நடனங்களை கண்டு ரசித்தார். முடிவில் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, உணவருந்தினார்.
தொடர்ந்து, உதகை ராஜ்பவன் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மரக்கன்று நட்டு, தண்ணீர் ஊற்றினார். அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், 4 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து குடியரசுத் தலைவர் நேற்று காலை உதகை ராஜ்பவன் மாளிகையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர் வழியாக கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
முன்னதாக, ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் மெய்யநாதன், ஏடிஜிபி ஜெயராமன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர். உதகையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. உதகை ராஜ் பவன் மாளிகையிலிருந்து கிளம்பிய குடியரசுத் தலைவர் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வழக்கத்தைவிட மிகவும் மெதுவாக, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் சென்றன.
இதனால் காலையில் 10:10 மணிக்கு ராஜ்பவன் மாளிகையில் இருந்து கிளம்பிய குடியரசுத் தலைவர் வாகனம் கோவை மாவட்ட எல்லைக்குள் 12.12 மணிக்கு சென்றது. வழக்கமாக உதகையில் இருந்து கோவை மாவட்ட எல்லைக்குச் செல்ல 1.30 மணி நேரம் ஆகும் நிலையில், வாகனம் மெதுவாகச் சென்றதால் நேற்று 2 மணி நேரமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT