Published : 13 Aug 2014 02:29 PM
Last Updated : 13 Aug 2014 02:29 PM

மின்திட்டங்கள் தாமதத்துக்கு ரூ.7,418 கோடி அபராதம் விதிக்க அரசு தவறியது ஏன்?- சிஏஜி குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க ராமதாஸ் கோரிக்கை

மின்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக, அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூ.7418 கோடி அபராதமாக வசூலிக்கப்படவில்லை என்ற சிஏஜி குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனல் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையின்றி காலதாமதம் செய்யப்படுவதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பதை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை உறுதி செய்திருக்கிறது.

அனல் மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்ட முறை குறித்தும், மின்திட்டப்பணிகள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்ததை கண்டுகொள்ளாமல் இருந்தது குறித்தும் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வடசென்னை இரண்டாம் கட்ட அனல் மின்திட்டத்தின் இரு மின் உற்பத்தி அலகுகளும், மேட்டூர் மூன்றாம் கட்ட அனல் மின்நிலையமும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பே மின்னுற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், வடசென்னை அனல் மின்திட்ட முதல் அலகு 33 மாதங்களும், இரண்டாம் அலகு 30 மாதங்களும், மேட்டூர் அனல் மின்திட்டம் 24 மாதங்களும் தாமதமாக உற்பத்தியை தொடங்கியிருக்கின்றன என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குற்றஞ்சாற்றியிருக்கிறார்.

இத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களின்படி மேட்டூர் அனல் மின்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.107 கோடி வீதம் அத்திட்டத்தின் ஒப்பந்ததாரரான பி.ஜி.ஆர். குழுமத்திடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். வடசென்னை அனல் மின்திட்டத்தின் இரு அலகுகளை நிறுவுவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்காக ஒவ்வொரு அலகுக்கும் வாரத்திற்கு தலா ரூ.12 கோடி வீதம் அதன் ஒப்பந்ததாரரான பெல் நிறுவனத்திடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வகையில் வடசென்னை மற்றும் மேட்டூர் மின்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூ.7418 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பைசா கூட அபராதமாக வசூலிக்கப்பட வில்லை என்றும், அந்நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் 82 விழுக்காட்டை தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் வழங்கிவிட்டதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த இரு மின்திட்டங்களையும் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக 2256 கோடி அலகுகள் (யூனிட்டுகள்) மின்னுற்பத்தி இழப்பு ஏற்பட்டதாகவும், இதை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மிக அதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஓர் அலகு மின்சாரம் ரூ.10 கூடுதலாக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக வைத்துக்கொண்டால், அந்த வகையில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ. 22 ஆயிரத்து 560 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். இந்த இரு மின்திட்டங்களில் மட்டுமே அரசுக்கு சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றால் மற்ற மின்திட்டங்களில் ஏற்பட்ட கால தாமதத்தையும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரிய ஊழல் தமிழகத்தில் அரங்கேறியிருக்க வாய்ப்பிருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் வடசென்னை மின்திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றையும் ஒதுக்கிவிட முடியாது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ. 10,000 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்து வருகிறது. அந்நிறுவனத்தின் கடன்சுமை ரூ.70,000 கோடியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய ரூ.7148 கோடியை மின்னுற்பத்திக் கழகம் வசூலிக்காதது மர்மம் விளங்கவில்லை. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, அதில் தனிப்பட்ட முறையில் லாபம் பார்க்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கருதியதால் வேண்டுமென்றே மின் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டனவா? இதற்கு ஒப்பந்ததாரர்கள் உடந்தையாக இருந்ததால் அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படவில்லையா?

மின்திட்டப்பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து வாரம் ஒருமுறை கூடி ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 10 உறுப்பினர் குழு இது குறித்த உண்மைகளை முதல்வரிடம் தெரிவிக்கவில்லையா? அல்லது தெரிவித்தும் முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லையா? என்ற வினாக்களுக்கு எல்லாம் விடை காணப்பட வேண்டும். எனவே, இதுகுறித்த அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசே ஆணையிட வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x