Published : 01 Dec 2024 01:44 AM
Last Updated : 01 Dec 2024 01:44 AM
சென்னை / புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் சனிக்கிழமை நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Fengal December 1 2024 7:00 AM update #StayUpdated #StaySafe #cyclonefenjal #CycloneAlert pic.twitter.com/iEqOHk3XT5
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 1, 2024
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மகாபலிபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசி வருகிறது. அத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
ஃபெஞ்சல் புயல் தாக்கம் எப்படி? - ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பலத்த வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியதால், ஒரே நாளில் சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின. இதனால் பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரில் 334 இடங்களில் நீர் தேங்கியுள்ளது.
வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சூறாவளி காற்றால் 27 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. 8 நிவாரண முகாம்களில் 193 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நேற்று மதியம் வரை 2.32 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை காலை சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி, பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். அமைச்சர் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிவாரண முகாம்களுக்கு உணவு தயாரிக்க தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை முழுவதும் விடாமல் மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. தவிர, காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதன் காரணமாக, பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டன.
வடபழனி, தியாகராய நகர், பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், வியாசர்பாடி, அடையாறு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் மழைநீர் தேங்கியது. விமான பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கனமழையால் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பல்லாவரம் பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. அதனால் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு ரயில்கள் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு ரயில்கள் வருகை, புறப்பாடு தாமதமானது.
சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 9 ரயில்கள் சென்னை கடற்கரை, திருவள்ளூரில் இருந்து புறப்பட்டன. புயலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில், மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இன்றி வழக்கம்போல இயக்கப்பட்டது, பயணிகளுக்கு வசதியாக இருந்தது.
சூறாவளி காற்று, கனமழை காரணமாக 55 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 20 விமானங்கள் ஹைதராபாத், பெங்களூரு, திருச்சி விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை விமான நிலையம் சனிக்கிழமை பிற்பகல் பகல் 12.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பல இடங்களில் காற்றின் வேகம் தாங்காமல் மரங்கள் சாய்ந்தன. அவற்றை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராத தொகை இல்லாமல் டிசம்பர் 10-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘ஃபெஞ்சல்’ புயல் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறும்போது, “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘ஃபெஞ்சல்’ புயல், வட தமிழக கரையை நெருங்கி, புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை புயலாக கரையை கடந்தது. இதன் காரணமாக காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் 11 செ.மீ., நுங்கம்பாக்கம், புதுச்சேரியில் 10 செ.மீ., திருத்தணியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
புயல் கரையை கடந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் (டிச.1, 2) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் 6-ம் தேதி வரை மழை இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று அவர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT