Published : 01 Dec 2024 12:49 AM
Last Updated : 01 Dec 2024 12:49 AM

மழை தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

‘ஃபெஞ்சல்’ புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி வாயிலாகவும், சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாகவும் மழை விவரம், முகாம்கள் விவரம், தண்ணீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர்கள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் முத்தமிழ் மன்ற நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களிடம் காணொலி வாயிலாக முதல்வர் பேசினார். முகாமில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, அதிகாரிகளுக்கு முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்: புயல், மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில், உடனடியாக மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்ப்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . மரங்கள் விழுந்தால், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உடனே அப்புறப்படுத்த வேண்டும். மின் கட்டமைப்பு பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்க மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும்.

அம்மா உணவகத்தில் இலவச உணவு: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று (நவ.30) முழுவதும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு மக்களிடம் இருந்து தொலைபேசி மூலம் பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

மக்களுக்கு வேண்டுகோள்: ‘‘பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். புயலை வேடிக்கை பார்ப்பதற்காக கடற்கரை பகுதிகளுக்கு செல்லக்கூடாது. அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்’’ என பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் துறை செயலர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: தொடர்ந்து 2-3 நாட்கள் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழக அரசும் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று (நவ.29) இரவு கடுமையான மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று (நவ.30) இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்துள்ளது.

சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடிய அனைத்து இடங்களிலும் முன்கூட்டியே அதற்கான முன்னேற்பாடுகள், நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். எனவே, தற்போது வரை எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி இருந்தாலும், சமாளிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டியான தியாகராய நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதாக தகவல் வந்தது பற்றி கேட்கிறீர்கள். இப்போது இல்லை. தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்கள் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைத்து, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உணவும் வழங்கப்படுகிறது. இன்று (நவ.30) இரவு கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

மருத்துவமனையில் ஆய்வு: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் மழைநீர், கழிவுநீர் வெளியேற்றப்படுவதை ஆய்வு செய்தார். பூக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தையும் பார்வையிட்டார். ராயபுரம் சூரிய நாராயணா தெருவில், ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

பேரிடர் மீட்பு குழுக்கள்: இதற்கிடையே, முதல்வர் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டுக்கு பேரிடர் மீட்பு படையின் தலா 3 குழுக்கள், கடலூர், தஞ்சாவூர், திருவாருர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 2 குழுக்கள் என மொத்தம் 18 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x