Published : 01 Dec 2024 12:26 AM
Last Updated : 01 Dec 2024 12:26 AM
வனவிலங்குகள், அரிய வகை மரங்கள் குறித்த வனக்குற்றங்கள் தொடர்பாக மாவட்டவாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் நிகழும் வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய குழுக்களை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை சார்பி்ல் ஆஜரான அரசு சிறப்பு ப்ளீடர் சீனிவாசன், வனக்குற்றங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
அதைப்படித்துப் பார்த்த நீதிபதிகள், நீதிமன்றம் கோரிய முழு விவரங்களையும் வனத்துறை இந்த அறிக்கையில் தாக்கல் செய்யவில்லை. அரிய வகை விலங்குகள் வேட்டையாடப் படுவதாகவும், செம்மரம், சந்தனம், தேக்கு போன்ற மரங்கள் கடத்தப்படுவதாகவும் அவ்வப்போது நாளிதழ்களில் செய்தி வெளியாகி வருகின்றன. ஆனால் அரிய வகை மரங்கள் கடத்தல் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் இல்லை. வனக்குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யும்படி கோரியிருந்தோம். ஆனால் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டஙளைப் பற்றிய விபரங்கள் இல்லை.
எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள வனவிலங்குகள், அரியவகை மரங்கள் குறித்த வனக்குற்றங்கள் தொடர்பான நிலுவை வழக்குகளின் விவரங்கள், அதன் தற்போதைய நிலை, அந்த மாவட்டங்களில் வனக்கோட்டம் இருக்கிறதா, இல்லையா என்பது மாவட்டவாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு என வனத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT