Published : 30 Nov 2024 08:51 PM
Last Updated : 30 Nov 2024 08:51 PM
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலையொட்டி சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக மரக்காணத்தை ஒட்டியுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படுவதோடு தரைக் காற்றும் பலமாக வீசியது.
புயல் எச்சரிக்கை காரணமாக மரக்காணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எக்கியார்குப்பம், கைப்பாணிக்குப்பம், கூனிமேடுக்குப்பம், அனுமந்தைக்குப்பம், கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. மீன்வர்கள் தங்களது படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மரக்காணம் மேட்டுத் தெருவில் சாலையோரம் குடிசைகளை அமைத்து வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் மரக்காணம் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக இரவு முதல் இடைவிடாது மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனிடையே சாலைகளும் தொடர் மழையினால் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பிற்பகல் முதல் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மரம் வேறோடு சாய்ந்தது. பேரிடர் மீட்புக் குழுவினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதற்கிடையில் மரக்காணம் கூனிமேடு புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை வனத்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக், ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச், எம்எல்ஏக்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மஸ்தான் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பழனி கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம், வானூர் தாலுகாவில் உள்ள மீனவ கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கனமழை பெய்தால் உடனடியாக அப்பகுதி மக்களை சம்பந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கும் பட்சத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளில் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கான மரம்வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
மின்பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக சரிசெய்வதற்கான மின்கம்பிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருப்பதோடு மின் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் உள்ளட்டவற்றில் நீர் இருப்பு குறித்த தகவல் மற்றும் நீர் வெளியேறும் அளவினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாாக்குபைகள் ஆகியவற்றை இருப்பு வைத்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை சார்பில் மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாாதுகாப்பாக நிறுத்தி வைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் போதிய மாத்திரை மற்றும் மருந்துகள் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
உதவி எண்கள்: பொதுமக்கள் கனமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது. கட்டணமில்லா அழைப்பு எண் 1077, புகார் தொலைபேசி எண் 04146-223265, வாட்ஸ்அப் எண் - 7200151144 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT