Published : 30 Nov 2024 07:41 PM
Last Updated : 30 Nov 2024 07:41 PM
சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அதேவேளையில், மாநகரப் பேருந்துகளும், மெட்ரோ ரயில் சேவையும் கைகொடுத்தன.
மின்சார ரயில் சேவை பாதிப்பு: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்து, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை சனிக்கிழமை காலை தாமதமாக தொடங்கினாலும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மார்க்கங்களில் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
இதனிடையே, பல்லாவரத்தில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ரயில் சேவை சனிக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் தாமதமாகின. அதன்பிறகு, கடற்கரை - தாம்பரம் இடையே நேரடி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. தாம்பரத்துக்கு புறப்பட்ட மின்சார ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில் வண்டலூர் வரை மட்டும் இயக்கப்பட்டன.
புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நண்பகல் 12.15 முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர், பலத்த காற்று காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பாக விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு எண்: 044-25330952, 044-25330953. சென்ட்ரல் : 044-25354140 மற்றும் 22277, எழும்பூர் :9003161811, தாம்பரம்: 8610459668, செங்கல்பட்டு: 9345962113, பெரம்பூர் :9345962147
கைகொடுத்த மெட்ரோ: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக பெய்த கனமழையிலும், சென்னையில் மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இன்றி வழக்கம்போல இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் நிம்மதியடைந்தனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை வழக்கமான காலஅட்டவணைப்படி இயக்கப்பட்டன. பெரிய அளவில் பாதிப்பும் இல்லாமல், முழு அளவில் இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் போதிய முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. பயணிகளுக்கான தகவலை, சமூக வலைதளத்திலும் உடனுக்குடன் வெளியிட்டோம்.
கடந்த காலத்தில், கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு, அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களின், வாகன நிறுத்தங்களில் மழை நீர் தேங்கும். எனவே, பயணிகள் இந்த இரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும், வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை இருந்து நடைமேம்பாலத்தை பயன்படுத்தி கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் செல்ல அறிவுறுத்தி உள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும்படிக்கட்டு இயக்கப்பட வில்லை. இதுதவிர சில மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும்படிக்கட்டு, மின்தூக்கிகள் இயக்கப்பட வில்லை. பயணிகளை படிக்கட்டுகள் வழியாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.
70% மாநகர பேருந்துகள் இயக்கம்: கனமழையால் வடபழனி, தியாகராய நகர், பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், வியாசர்பாடி, அடையாறு, சைதாப்பேட்டை, பட்டினம்பாக்கம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, ஆவடி, அம்பத்துார், பெரம்பூர், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் மழைநீர் தேங்கியது. இந்தச் சூழலிலும் சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் காலை முதல் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.
அத்தியாவசிய தேவையை தவிர்த்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையில், பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பிரதான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. மழைநீர் தேங்காத சாலைகளில் மட்டுமே தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேருந்துகளின் இயக்கம் கண்காணிக்கப்பட்டு நடத்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே, தியாகராய நகர் பனகல் பார்க் அருகே மழைநீரில் சிக்கிய ஆட்டோவை பத்திரமாக இழுத்துச் சென்று கரை சேர்த்த மாநகர பேருந்தின் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டப்பட்டது.
இதுமட்டுமின்றி, கடந்த புயலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையை போலவே, சென்னை விமான நிலையத்தில் இருந்த பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விமான நிலையத்தில் இருந்து விரைவில் அனைத்து நாட்களிலும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT