Published : 30 Nov 2024 06:09 PM
Last Updated : 30 Nov 2024 06:09 PM

சென்னை கனமழை: விரைவு ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்தது. | படம்: ஆர்.ரகு

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது. தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு சனிக்கிழமை காலை வந்த சில விரைவு ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. மதுரையில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை மதியம் வந்த வைகை விரைவு ரயில் உள்பட சில விரைவு ரயில்கள் அரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். இதுபோல, சென்ட்ரல் வந்தடைந்த விரைவு ரயில்களும் சிறிது தாமதமாகின.

இதற்கிடையே, பலத்தமழை காரணமாக, பேசின்பாலம் - வியாசர்பாடி இடையே ரயில்வே பாலத்தை ஒட்டி, மழை நீர் நிரம்பியதால் பல விரைவு ரயில்களின் சேவையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டைக்கு சனிக்கிழமை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய ஏலகிரி விரைவு ரயில் (16089) ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இயக்கப்பட்ட சப்திகிரி விரைவு ரயில் (16054), மற்றும் கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட லால்பாக் விரைவு ரயில்கள் (12680) ஆவடியில் நிறுத்தப்பட்டன. மைசூர் - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட விரைவு ரயில் (12610), லோக்மான்யதிலக் டெர்மினஸ் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12163) ஆகியவை திருவள்ளூரில் நிறுத்தப்பட்டன. மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் (22638) அரக்கோணத்தில் நிறுத்தப்படும்.

சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு சனிக்கிழமை மதியம் 2.25 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16053), திருவள்ளூரில் இருந்து புறப்பட்டது. சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூருக்கு மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி விரைவு ரயில் (12679) ஆவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய 9 விரைவு ரயில்கள் திருவள்ளூர் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டன. இதுதவிர, இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. ரயில்களின் சேவை மாற்றத்தால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் மூடல்: சென்னையில் சனிக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை பல மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மோசமான வானிலை நிலவியதால், அபுதாபியில் இருந்து 151 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

சிங்கப்பூர், துபாய், திருச்சி, கோவை, டெல்லி, கோழிக்கோடு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. பின்னர், ஹைதராபாத், திருச்சி, பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. இதேபோல, 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. பகல் 2 மணிக்கு மேல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸின் சிறிய ரக விமானங்கள் (ஏடிஆர்) அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பகல் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு பிறகு வானிலை சீரானதும் வழக்கம்போல விமான சேவை தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள், வளாகத்திலேயே காத்திருந்தனர். விமான புறப்பாடு, வருகையில் ஏற்படும் தாமதம் குறித்து விமான நிலையம், விமான நிறுவனங்கள் தரப்பில் முறையாக அறிவிக்கவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x