Published : 30 Nov 2024 05:58 PM
Last Updated : 30 Nov 2024 05:58 PM

மக்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்: செந்தில் பாலாஜி | ஃபெஞ்சல் புயல் தாக்கம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்

சென்னை: ஃபெஞ்சல் புயலின்போது மின் விநியோக சாதனங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 10,000 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியது: “ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது. இதுவரை, மின்சாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை. மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான மழை பெய்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழையுடன் பலத்த காற்று 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அவ்வாறான பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை நிறுத்தம் செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 10,000 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளனர். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அனைத்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

மின்தடங்கல் ஏதேனும் ஏற்பட்டால் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் ‘ஆஃப்’ செய்து வைக்கக் கூடாது. இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இதற்கிடையே, மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை (94987 94987) தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x