Published : 30 Nov 2024 04:33 PM
Last Updated : 30 Nov 2024 04:33 PM
சென்னை: “புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. அதுவொரு சின்ன புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும், புதுவைக்கு அருகே என்றும் கரையைக் கடக்கும் இடம் குறித்து கூறுகிறோம். புயல் அமைப்பின் மையப்பகுதிக் கூட ஒரு சின்ன புள்ளியாக இருக்காது. அதுவே ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (நவ.30) பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஃபெஞ்சல் புயல், தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும்.
அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
டிச.1-ம் தேதி, கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். டிச.2-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று புயல் கரையைக் கடக்கின்றபோது, திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது, மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொருத்த வரையில், கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 354 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 354 மி.மீ.
தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரையிலான நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில் 97 மி.மீ, மீனம்பாக்கத்தில் 102 மி.மீ, மாமல்லபுரத்தில் 70 மி.மீ. சென்னை விஐடி வளாகம் 74 மி.மீ. , ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் 82 மி.மீ, பூந்தமல்லி 79 மி.மீ, கோளப்பாக்கம் 102 மி.மீ, புழல் 68 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
காலை 8.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் தரைக்காற்று 50 கி.மீ வரை பதிவாகியுள்ளது. மேலும், நுங்கம்பாக்கத்தில் இன்று காலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலான காலக்கட்டத்தில், மூன்றரை மணி நேரத்தில் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது. புயல் கரைக்கு அருகில் வரும்போது அதன் நகரும் வேகம் சற்று குறையக்கூடும். புயல் குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும்.
புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சில மணி நேரங்கள் கூட ஆகலாம். அது ஒவ்வொரு புயலின் அமைப்பைப் பொருத்தது. ஃபெஞ்சலைப் பொறுத்தவரை, சில சமயங்களில் 12 கி.மீ, சில சமயங்களில் 7 கி.மீ வேகம், சில சமயங்களில் 13 கி.மீ வேகத்தில் செல்கிறது. பல்வேறு காரணிகளுடன் தொடர்புடையதால், அதன் வேகத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. புயலைச் சுற்றியுள்ள மேககூட்டங்களைப் பொருத்துதான் மழை பொழிவு இருக்கும்.
மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்தால், தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும். கொஞ்சம் விலகியிருந்தால் விட்டுவிட்டுத்தான் மழைப்பொழிவு இருக்கும். அக்.1 முதல் டிச.31 வரையிலான காலக்கட்டத்தில் பெய்வது பருவமழை. புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. அதுவொரு சின்ன புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும் புதுவைக்கு அருகே என்றும் கூறுகிறோம். புயல் அமைப்பின் மையப்பகுதிக்கூட ஒரு சின்ன புள்ளியாக இருக்காது. அதுவே ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT