Published : 30 Nov 2024 01:33 PM
Last Updated : 30 Nov 2024 01:33 PM

அம்மா உணவகங்களில் இலவச உணவு: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

இடம்:பெரம்பூர் நெடுஞ்சாலை | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

சென்னை: “அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும். அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், மிக அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x