Published : 30 Nov 2024 01:48 PM
Last Updated : 30 Nov 2024 01:48 PM

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் அமைதியாக்கிய ‘அதானி மந்திரம்’!

அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, இருப்பினும் தமிழகத்தில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. அமெரிக்​காவில் சோலார் பவர் திட்டத்தில் முதலீட்​டாளர்களை ஏமாற்றிய​தாக​வும், அதிகாரி​களுக்கு லஞ்சம் கொடுத்​த​தாகவும் கவுதம் அதானி மீது குற்றச்​சாட்டுகள் அடுக்​கப்​பட்​டுள்ளன.

ஆனால், இதை அடியோடு மறுத்​துள்ளது அதானி குழுமம். இதில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும், அதானியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்தை முடக்கி வருகின்றன. அதானி குழுமம் மீதான குற்றச்​சாட்டு​களில் அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்​நாடு, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின்வாரி​யங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்​றத்தில் கூறப்​பட்​டுள்ளது. இதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் அதிகாரி​களுக்கு லஞ்சம் கொடுத்​த​தாகவும் குற்றம் சுமத்​தப்​பட்டுள்ளது.

ஆனால், “கடந்த 3 ஆண்டுகளாக நேரடியாக அதானி நிறுவனத்​துடன் எந்த வணிகத் தொடர்பும் இல்லை” என்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனிடையே, “முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்தாரா என்று விளக்​கமளிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அளித்த பதில் பாமகவினரை டென்ஷ​னாக்கி​யுள்ளது.

அதானி விவகாரத்தை தேசிய அளவில் எதிர்க்​கட்​சிகள் கையில் எடுத்து அலறவிடும் நிலையில், தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே இந்த விவகாரத்தில் அடக்கி வாசிக்​கின்றன. முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்ததாக பேச்சுக்கள் எழுந்​துள்ள நிலையில், எதிர்க்​கட்​சியான அதிமுக இதுபற்றி வாய்திறக்கவே இல்லை.

தங்களது ஆட்சி காலத்தில் அதானி குழுமத்​துடன் இருந்த உறவே அவர்களை மவுனமாக்​கி​விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்​சாட்டு​கின்றன. திமுக, பாஜக என இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் அதிமுக, அதானி விவகாரத்தில் ‘அமைதி காப்பது’ ஏன் என அதிமுக​வுக்​குள்ளேயே சிலர் கேள்வி எழுப்பு​கின்​றனர்.

அதேபோல அதானி விவகாரத்தை தமிழ்​நாட்டில் பெரிதாக எழுப்ப முடியாமல், திமுக கூட்டணிக் கட்சிகளும் பூசிமெழுகி அறிக்கை வெளியிட்டு வருகின்றன. முன்பெல்லாம் அதானி விவகாரம் என்றால் அதிரடி கேள்விகளை எழுப்பும் தமிழகத்தில் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகள், இப்போது திமுக​வுக்கு சங்கடம் வருமோ என்று மவுனமாகி விட்டனவா என்ற கேள்வி​களும் எழுகின்றன.

“அதானி விவகாரத்தை நாடாளு​மன்​றத்தில் எழுப்பு​வேன்” என நைஸாக நழுவி​விட்டார் திருமாவளவன். “அதானி சர்ச்​சையில் முதல்வர் ஸ்டாலினை குற்றம்​சாட்டும் ராமதாஸ், பிரதமர் மோடியை கேள்வி கேட்பாரா?” என ஒரே போடாக போட்டிருக்​கிறார் வைகோ.

தர்மசங்​கடமாக, அதானி விவகாரத்தில் தமிழகத்தின் பெயர் இடம்பெற்றதை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாத சூழலில் பாஜகவும் பரிதவிக்​கிறது. மாநிலத்தில் அதானி விவகாரத்தை கையில் எடுத்​தால், அது நமக்கே பூமராங் ஆகிவிடும் என பாஜக அமைதி​யாகி​விட்டது.

இதில் திமுகவை குற்றம்​சாட்டி அறிக்கை விட்டதோடு பாமகவும் ஆஃப் மோடுக்கு சென்று​விட்டது. திமுகவை கடுமையாக எதிர்க்கும் தினகரன், ஓபிஎஸ், வாசன் போன்றோரும் இவ்விவ​காரத்தில் கனத்த மவுனம்​தான். எந்த சர்ச்சை வெடித்​தா​லும், அதில் ஆளும் கட்சி தரப்போ அல்லது எதிர்க்​கட்​சிகளின் தரப்போ கையில் எடுத்து தெறிக்க​விடுவது வழக்கம். ஆனால் தனது விஷயத்தில் அனைத்துத் தரப்​பையும் அமை​தி​யாக்​கி​யிருக்​கிறது அதானியின் ‘மந்​திரம்’!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x