Last Updated : 30 Nov, 2024 01:20 PM

2  

Published : 30 Nov 2024 01:20 PM
Last Updated : 30 Nov 2024 01:20 PM

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ - மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கம் அதிகம் என்பார்கள். அப்படி இருக்கையில், மாரி செல்வராஜின் சொந்த கிராமமான புளியங்குளத்தைச் சேர்ந்த 300 பேர் விஜய்யின் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

2026 சட்டப்​பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மாநிலம் முழுவதும் உறுப்​பினர் சேர்க்கையை தீவிரப்​படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சினிமா இயக்குநர் மாரி செல்வ​ராஜின் சொந்த கிராமமான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்​குளத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் கடந்த 28-ம் தேதி மொத்தமாக தவெகவில் இணைந்​தனர். இதில், திமுக, அதிமுக, விசிக, நாதக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்​தவர்​களும் இருந்தது குறிப்​பிடத்​தக்கது.

‘வாழை’ படத்தில் சிவணைந்தன் கதாப்​பாத்​திரத்தில் நடித்த பொன்வேல் என்ற சிறுவனின் பெற்றோரும் இந்த இணைப்பில் இருந்​தனர். பொன்வேலும் இதில் கலந்து கொண்டார். அவருக்கும் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கட்சி சால்வை அணிவித்​தார். இந்த மெகா இணைப்பு குறித்து நம்மிடம் பேசிய அஜிதா ஆக்னஸ், “விஜய் மீதான ஈர்ப்பில் தான் புளியங்​குளத்து மக்கள் மொத்தமாக தவெக-வில் இணைந்​துள்ளனர். கிராம​மாகவே மொத்தமாக இணைய விரும்​புவதாக கேட்டுக் கொண்டிருந்​தனர்.

நீங்கள் என்னைத் தேடி வரவேண்​டாம். நானே உங்களைத் தேடி வருகிறேன் எனக் கூறி இருந்​தேன். அதன்படி இன்று இங்கு வந்தோம். மாற்றத்தை உருவாக்க ஒருவர் வந்துள்ளார். அந்த மாற்றத்தில் நாமும் உடனிருப்போம் என்ற அடிப்​படையில் தான் இவர்கள் அனைவரும் தவெக-வுக்கு வந்துள்ளனர்.

தங்கள் கிராமத்​துக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்க​வில்லை. விஜய் ஆட்சிக்கு வந்தால் அது நிறைவேறும், குறிப்பாக, தங்கள் தொழிலான விவசாயம் மேம்படும் என இவர்கள் நம்பு​கிறார்கள். ‘வாழை’ படத்தில் நடித்த பொன்வேலின் குடும்பத்​தினர் மொத்த​மாகவே தவெக-வில் இணைந்​துள்ளனர். பொன்வேல் 2026-ல் தனது முதல் ஓட்டை விஜய்க்குத்தான் போடுவார் என அவரது பெற்றோர் தெரிவித்​தனர். இது எங்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்​தியது.

தாங்கள் தவெகவில் இணைந்து பணியாற்ற இயக்குநர் மாரி செல்வ​ராஜூம் ஆதரவு தெரிவித்ததாக புளியங்​குளத்து மக்கள் கூறினர். 2026-ல் விஜய் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்​கிறோம். இனி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

இந்த இணைப்பு நிகழ்ச்​சிக்கு ஏற்பாடு செய்த புளியங்​குளத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதா​ரியான த.பொன்​மயில் நம்மிடம் பேசுகை​யில், “தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்​பார்த்து காத்திருக்​கின்​றனர். அது விஜய் மூலமாக வரும் என எதிர்​பார்க்​கின்​றனர். மேலும், விக்கிர​வாண்டி மாநாட்டில் விஜய்யின் பேச்சு கிராம மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்​தி​யுள்ளது. அந்த தாக்கத்தை ஒருங்​கிணைத்து மக்களை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளோம். இதில் இளைஞர்கள் தான் அதிகமாக இணைந்​துள்ளனர். 2026-ல் நிச்சயம் மாற்றம் நிகழும்” என்றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x