Last Updated : 30 Nov, 2024 12:54 PM

 

Published : 30 Nov 2024 12:54 PM
Last Updated : 30 Nov 2024 12:54 PM

ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் 5,000 பேர் தீவிரம்

புதுச்சேரி: வங்கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்ள நிலையில், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று காலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் தாக்கத்தால், நகரின் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்பு மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழையினால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்றவும் அரசு துறைகள் தயார் நிலையில் உள்ளன. கடல் அலைகள் சீற்றம் காரணமாக பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆர்பரிக்கின்றன. முன்னெச்சரிக்கையாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவையை தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுத்துள்ளது. கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பாண்டி மெரினா கடற்கரை, தலைமை செயலகம் அருகே உள்ள கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சீனியர் எஸ்பி கலைவாணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் குலோத்துங்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஃபெஞ்சல் புயல் இன்று இரவு 7 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் உதவி தேவைப்பட்டால் 112, 1077 மற்றும் வாட்ஸ்அப் 9488981017 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளோம்.

புயலை எதிர்கொள்ள 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை சாலை, பாரதி பூங்கா, பாண்டி மெரினா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அச்சமயத்தில் மரங்கள் விழும் வாய்ப்புகள் உள்ளதால் அவற்றை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வனத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சியினர் அடங்கிய குழு அமைத்துள்ளோம். அவர்களும் மரம் அறுக்கும் இயந்திரம், ஜேசிபி, கிரேன் போன்றவைகளுடன் தயாராக உள்ளனர்.

பேரிடர் மீட்பு படையினர் ஏற்கெனவே இங்கு வந்துவிட்டனர். இதுதவிர தன்னார்வலர்கள் 250 பேர் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர்.மீனவ கிராமங்களில் இதுவரை தண்ணீர் உட்புகவில்லை. புதுச்சேரியில் மழை அளவு மிகக்குறைவாக உள்ளது. தற்போது வரை 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களை ஏற்கெனவே எச்சரித்துள்ளோம். கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்கள் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம்.

அவர்கள் தற்போது நிவாரண முகாம்களுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். மீன்பிடி படகுகள், வலைகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள நிவாரண முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காலை முதல் 1300 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பேனர்கள் நேற்று முதல் அகற்றப்பட்டு வருகிறது. இன்று முழுமையாக அவை அகற்றப்பட்டுவிடும். சுற்றுலா பணிகளுக்கு உணவு மற்றும் வேறு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x