Published : 30 Nov 2024 04:39 AM
Last Updated : 30 Nov 2024 04:39 AM

புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கிறது: மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

புதுச்சேரியை புயல் நெருங்கி வரும் சூழலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. பழைய துறைமுக பாலத்தின் மீது ஆக்ரோஷமாக மோதும் அலை.படம்: எம்.சாம்ராஜ்

சென்னை: வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது புதுச்​சேரி அருகே இன்று பிற்​பகல் கரையை கடக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்​டங்​களில் அதிக​னமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. புயல் கரையை கடக்​கும் நேரத்​தில் 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசக்​கூடும் என்றும் எச்சரிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்​திரன் நேற்று கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்​பெற்றுள்​ளது. சவுதி அரேபி​யா​வின் பரிந்​துரைப்படி இதற்கு ‘ஃபெஞ்சல்’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இது வடமேற்கு திசை​யில் நகர்ந்துவட தமிழக கடற்கரை பகுதி​யில் காரைக்​கால் - மாமல்​லபுரம் இடையே புதுச்​சேரிக்கு அருகே நவம்பர் 30-ம் தேதி (இன்று) பிற்​பகல் புயலாக கரையை கடக்​கக்​கூடும். அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 90 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த காற்று வீசக்​கூடும்.

இதன் காரண​மாக, தமிழகத்​தில் டிசம்பர் 5-ம் தேதி வரை மழை நீடிக்​கும். இன்று (நவ.30) சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி, கடலூர் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும். தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை ஆகிய டெல்டா மாவட்​டங்​கள், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, வேலூர், பெரம்​பலூர், அரியலூர் மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், திருச்சி, புதுக்​கோட்டை, கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் பொதுவாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (டிச.1) நீலகிரி, கோவை திருப்​பூர், திண்​டுக்​கல், ஈரோடு மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், கரூர், தேனி, மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.2, 3-ம் தேதி​களில் நீலகிரி, கோவை, திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல், ஈரோடு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தரைக்​காற்று எச்சரிக்கை: வடதமிழக கடலோரம், அதை ஒட்டி​யுள்ள பகுதி​களில் இன்று சூறாவளி காற்று வீசக்​கூடும். மயிலாடு​துறை, கடலூர், விழுப்பு​ரம், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், சென்னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​கள், புதுச்​சேரி பகுதி​களில் மணிக்கு 70-80 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 90 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளி காற்று வீசக்​கூடும். நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்சாவூர், புதுக்​கோட்டை, பெரம்​பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்​குறிச்சி, ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, வேலூர் மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களில் 50-60 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 70 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த தரைக்​காற்று வீசக்​கூடும்.

வட தமிழகம், புதுச்​சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி​களில் இன்று முழு​வதும் 70-80 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 90 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த காற்று வீசக்​கூடும். தென் தமிழக கடலோர பகுதி​கள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்​கடல் பகுதி​களில் அதிகபட்​சமாக 65 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்கள் செல்ல வேண்​டாம். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்​தில் சென்னை​யில் அதிகபட்ச மழை பெய்​துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் (ஆட்சியர் அலுவல​கம்), மெரினா (டிஜிபி அலுவல​கம்), கத்திவாக்​கத்​தில் 6 செ.மீ., தண்டை​யார்​பேட்டை, கிண்டி அண்ணா பல்கலைக்​கழகம், நந்தனம், நுங்​கம்​பாக்​கம், திரு​வொற்றியூரில் 5 செ.மீ., தரமணி, ஐஸ் ஹவுஸ், மாதவரம், எண்ணூர், கொளத்​தூர், மணலி, ராயபுரம், பெரம்​பூரில் 4 செ.மீ. மழை பெய்​துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தயார் நிலை​யில் அரசுத் துறைகள்: இதற்​கிடையே, சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசரகால செயல்​பாட்டு மையத்​தில் வருவாய் துறை அமைச்சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் நேற்று ஆய்வு செய்​தார். பின்னர், செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கனமழையை எதிர்​கொள்ள தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்​க​வும், நிலை​மையை தொடர்ந்து கண்காணிக்​க​வும் ஆட்சி​யர்​களுக்கு முதல்வர் அறிவுறுத்​தி​உள்​ளார். நானும் அலுவலர்​களுக்கு அறிவுரைகளை வழங்​கி​யுள்​ளேன். அதிக​னமழை எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்ள மாவட்​டங்​களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்​கப்​பட்​டுள்ளன. திரு​வாரூர், நாகை மாவட்​டங்​களில் 6 நிவாரண முகாம்​களில், 164 குடும்​பங்களை சேர்ந்த 471 பேர் தங்கவைக்​கப்​பட்​டுள்​ளனர்.

சென்னை, செங்​கல்​பட்டு, திரு​வள்​ளூர் காஞ்​சிபுரம், கடலூர், மயிலாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்​டங்​களில் 1,193 ஜேசிபி இயந்​திரங்​கள், 806 படகு​கள், 977 ஜெனரேட்​டர்​கள், 1,786 மர அறுப்​பான்​கள், 2,439 மோட்​டார் பம்புகள் தயார் நிலை​யில் உள்ளன. முதல்வர் உத்தர​வின்படி ஏற்கெனவே, நாகை, மயிலாடு​துறை, திரு​வாரூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்​டங்​களுக்கு பேரிடர் மீட்பு படைகள் அனுப்​பப்​பட்​டுள்ளன.

தற்போது செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 1 குழு, மாநில பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்​கள், விழுப்பு​ரத்​துக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகளின் தலா 1 குழுக்கள் அனுப்​பப்​பட்​டுள்ளன. மீன்​பிடிக்க சென்ற 4,153 படகுகள் கரை திரும்​பி​யுள்ளன. அனைத்து துறை​யினரும் மாவட்ட நிர்​வாகத்​துடன் ஒருங்​கிணைந்து பணிகளை மேற்​கொண்டு வருகின்​றனர். செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை, வேலூர், ​திரு​வண்ணா​மலை, தரு​மபுரி, கிருஷ்ணகிரி ​மாவட்ட கண்​காணிப்பு அலு​வலர்​கள் அந்​தந்த ​மாவட்​டங்​களுக்கு ​விரைந்​துள்ளனர்.இவ்​வாறு அவர் கூறினார். வரு​வாய் நிர்வாக ஆணை​யர் ராஜேஷ் லக்​கானி, பேரிடர் மேலாண்மை இயக்​குநர் மோக​னசந்​திரன்​ உடன்​ இருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x