Published : 30 Nov 2024 04:19 AM
Last Updated : 30 Nov 2024 04:19 AM
சென்னை: மழைக் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார ஸ்விட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக் கூடாது.
வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்லக் கூடாது. சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதையோ தவிர்க்க வேண்டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கால்நடைகளை கட்ட கூடாது: மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டேவயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT