Published : 30 Nov 2024 01:35 AM
Last Updated : 30 Nov 2024 01:35 AM
வங்கதேச இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிச.4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வங்கதேச இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தில் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வங்கதேசத்தில் எப்போது என்ன பிரச்சினை நடந்தாலும், அங்கிருக்கும் சிறுபான்மை இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் உடமைகளைக் கொளுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு உருவான பிறகு, மீண்டும் அதே பதற்றம் அங்கு தொற்றிக் கொண்டுள்ளது. இந்து கோயில்கள் எரிக்கப்படுகின்றன. இந்து மக்கள் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு ஜாமீனில் வெளியே வராதபடி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு இந்து மக்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். சிறுபான்மை இந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உலகில் எந்த மூலையிலும் இந்து மக்களுக்கு பாதிப்பு என்றால், அவர்களுக்காக குரல் கொடுக்க இந்தியாவில் உள்ள 120 கோடி இந்து மக்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவும், வங்கதேச அரசுக்கு நமது கண்டனத்தை தெரிவிக்கவும், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிச.4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் இந்து அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதற்கான அனுமதியும், பாதுகாப்பும் தர வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் கேட்டிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடக்கவில்லை. வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு என அமைக்கப்பட்டு அதன் சார்பாக நடக்கிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட சிறுபான்மை அமைப்பினர் வரை அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். மாநில தலைவர் அண்ணாமலை டிச.2-ம் தேதி காலை 10 மணிக்கு கமலாலயம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT