Published : 29 Nov 2024 09:18 PM
Last Updated : 29 Nov 2024 09:18 PM
சென்னை: ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் நாளை கரையை கடப்பதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல சென்னை ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் நாளை பொதுப்போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மொத்தம் இதுவரை தமிழகத்தில் 9 மாவட்டங்களின் கல்வி நிறுவனங்களுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் (நவ.20) ரெட் அலர்ட் தரப்பட்டுள்ள நிலையில், அங்கு சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் அலர்ட்: ‘தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘ஃபெஞ்சல்’ புயலாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே சனிக்கிழமை மதியம் புயலாக கடக்கக் கூடும்.
அந்தச் சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது, சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த பெயராகும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் ரெட் அலர்ட்? - ஃபெஞ்சல் புயல் காரணமாக, சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் ரெட் அலர்ட் எனப்படும் அதி கன மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி , புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை: சனிக்கிழமை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஏற்கெனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT