Published : 29 Nov 2024 04:07 PM
Last Updated : 29 Nov 2024 04:07 PM
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில், இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜல் புயல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “ஃபென்ஜல்” புயலாக இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. திரிகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 310 கி.மீ., தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (30-ம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபென்ஜல் என பெயரிடப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த பெயராகும்.
அதி கனமழை எச்சரிக்கை: இதன் காரணமாக, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் டிச.5-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (நவ.30) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி , புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை: இன்று (நவ.29) வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (நவ.30-ம் தேதி) வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் - மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஏற்கெனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ.29) செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT