Published : 29 Nov 2024 03:40 PM
Last Updated : 29 Nov 2024 03:40 PM
உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தபடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி, ‘எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரிக்க கூடாது?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், இன்று (நவ.29) உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது, சிபிசிஐடி போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகி புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் கேட்டனர்.
அதனை அடுத்து வழக்கு விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். பின்னர், அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது எடப்பாடி பழனிச்சாமியை எதிர் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம்சாட்டபட்டவர்கள் கேட்டு கொண்டனர்.
ஆனால், தற்போது வழக்கு புலன் விசாரணை கட்டத்தில் இருப்பதால் யார் யாரை விசாரிக்க வேண்டும் என்பதை விசாரணை அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள். ஆனால், தற்போது சிபிசிஐடி போலீஸார் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கில் தொடர்புடையவர்கள், தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. அதில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தாலும் அல்லது எதிர் தரப்பு சாட்சியாக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள்’ என்றார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தியது போல எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரிக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது, தேவைப்பட்டால் அவரிடமும் விசாரிக்கப்படும் என்றும், வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT