Published : 29 Nov 2024 03:29 PM
Last Updated : 29 Nov 2024 03:29 PM
சென்னை: சட்டம் - ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேலமலை கவுண்டன் பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை படுகொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து பணம், நகைகளை அடையாளம் தெரியாத கும்பல் திருடிச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ திமுக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மூவரை கொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உலக அளவில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையை கொண்டிருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசி முடித்த இரு தினங்களுக்குள்ளாக நடைபெற்றிருக்கும் இந்த கொலைச் சம்பவங்கள் முதல்வரின் தலைமையில் இயங்கும் தமிழக காவல் துறை முற்றிலும் செயலிழந்து ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, இந்த படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவதை தவிர்த்து சட்டம் ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT