Published : 29 Nov 2024 03:26 PM
Last Updated : 29 Nov 2024 03:26 PM

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வழங்கியிருக்கிறார். மக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற அவரது நோக்கம் வரவேற்கத்தக்கது. அதற்கான அவரது அணுகுமுறை தான் பயனளிக்காதது ஆகும்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அதிகாரிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில்,‘‘மனுக்கள் பெறப்பட்ட உடனோ, அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்; மனுதாரரின் கோரிக்கையானது அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும்; கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப் பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும். ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சான்றுகளைப் பெறுவதற்கு கையூட்டு வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.

இதனால், தமிழ்நாட்டு மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள நிலையில் தான் இந்த வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் இதே போன்று வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பயனின்றி போய்விட்ட நிலையில், இந்த வழிகாட்டுதல்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பது தெரியவில்லை.

மேலும், தமிழக அரசு நினைத்தால் ஒற்றைச் சட்டத்தின் மூலம் அனைத்து சேவைகளும் மக்களுக்கு குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும். ஆனால், அதை செய்யாமல் இத்தகைய வழிகாட்டுதல்களை வழங்குவது, கொக்கை நேரடியாக பிடிப்பதற்கு பதிலாக, அதன் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி வழிந்து, கொக்கின் கண்களை மறைக்கும் போது பிடிக்கலாம் என்று காத்திருப்பதற்கு ஒப்பானதாகும். இந்த அணுகுமுறை பயனற்றது; வெற்றி பெற வாய்ப்பில்லாதது.

மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒற்றைச் சட்டம் என்பது பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தான். தமிழகத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

இதைச் செய்வதற்கு பதிலாக வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் இதை சாதிப்போம் என்று தமிழக அரசு நினைத்தால் இந்த முயற்சியில் அரசுக்கு படுதோல்வி தான் பரிசாகக் கிடைக்கும். இதற்கு சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகிறேன். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் , இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர்,‘‘பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும்.

மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தார். அதன்பின் 22 மாதங்களாகி விட்ட நிலையில், இன்று வரை முதலமைச்சரின் அறிவுறுத்தல்கள் செவிமடுக்கப்படவில்லை.

இதே அறிவுறுத்தல்களை சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் பலமுறை வழங்கியுள்ளன. ஆனால், அவை விழலுக்கு இறைத்த நீரானதே தவிர பயனளிக்கவில்லை. தலைமைச் செயலாளரின் புதிய அறிவுறுத்தலுக்கும் அதே நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான், இந்த அணுகுமுறையை விடுத்து சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது. இன்னும் கேட்டால் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையின் போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x