Published : 29 Nov 2024 02:43 PM
Last Updated : 29 Nov 2024 02:43 PM

‘‘மருத்துவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’ - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன்

சென்னை: அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அமமுக பொதுச்செயளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் ஒன்றில் மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய சுகாதாரத்துறை உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தன்னலம் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்களை தரக்குறைவாக நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

5 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தியிருப்பது, வடகிழக்கு பருவமழை நேரத்தில் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய பொதுமக்களையும், நோயாளிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களின் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x