Published : 29 Nov 2024 02:15 PM
Last Updated : 29 Nov 2024 02:15 PM
சென்னை: 2024 ஆம் ஆண்டு, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிச.20 என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
தங்களது விண்ணப்பம் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2024-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிச.20 ஆகும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT