Published : 29 Nov 2024 02:29 PM
Last Updated : 29 Nov 2024 02:29 PM

மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

ஜி.கே. வாசன்

சென்னை: தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, முழு நிவாரணத்தை வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மழை வெள்ள புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் .ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசு மாநிலத்தில் ஆங்காங்கே பெய்கின்ற மழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். கடந்த 3 தினங்களாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சில மாவட்டப் பகுதிகளில் அதி கன மழையும் பெய்து வருகிறது. பெய்த கன மழையால் விளைநிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தஞ்சையில் 947 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், கடலூரில் 500 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், மயிலாடுதுறையில் 3300 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், நாகையில் 7600 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், ராமநாதபுரத்தில் 800 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம், திருவாரூரில் 958 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் போதிய வடிகால் வசதி இல்லாததும், முறையாக தூர் வாராததும் தான். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கனமழையால் நாகை மாவட்டப் பகுதிகளில் 9 ஆயிரம் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் இன்று 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மழை, கன மழை, அதி கன மழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.

எனவே தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மழை வெள்ள புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், சேதமடைந்துள்ள பயிர்களுக்கும், உப்பளங்களுக்கும் முழு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x