Published : 29 Nov 2024 06:20 AM
Last Updated : 29 Nov 2024 06:20 AM

மருத்​துவர் காலிப்​பணி​யிடங்களை நிரப்பக் கோரி மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்​கணிப்பு

சென்னை: மக்கள் நல்வாழ்த்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு கூட்டத்துக்கான புதிய வரைமுறையையும் வகுக்க வேண்டும்.

மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் தாய் மரணங்களை குறைக்க வழிகாட்டுதல் முறை எந்த வகையிலும் உதவாது. எனவே அவற்றை கைவிட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும். விருப்ப ஓய்வு முறையில் இருப்பவர்களுக்கு உடனடியாக விருப்ப ஓய்வு வழங்க வேண்டும்.

இத்துடன் பயோமெட்ரிக் முறையில் டாக்டர்கள் தங்களது வருகையை பதிவுசெய்ய மாட்டார்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து டிச.2 முதல் அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பிரிவுகளில் இருந்து அந்தந்த மாவட்ட அளவில் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். டிச.3-ம் தேதி அனைத்து துறைகளிலும் அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகளும் ஒருநாள் அடையாளமாக நிறுத்தப்படும். அதன் பின்னரும் தீர்வு காணப்படவில்லை எனில் டிச.4-ம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x