Published : 29 Nov 2024 06:13 AM
Last Updated : 29 Nov 2024 06:13 AM
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைக்கு பதிலாக புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்தவகையில் சுமார் 5 ஆயிரம் புத்தகங்கள் பிறந்தநாளன்று அவருக்கு வழங்கப்பட்டன. அவை அனைத்தும் திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அதேபோல், வாழ்த்து சொல்ல வந்தவர்கள் ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள், முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலர் பழங்கள் வழங்கினர். அவை அனைத்தும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வழங்கிய 10-க்கும் மேற்பட்ட வீரவாள்கள் அன்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
அனைவருக்கும் நன்றி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளை பெற்று புத்துணர்ச்சியோடும், பெரும் ஊக்கத்தோடும் புதிய ஆண்டை தொடங்குகிறேன். என் பிறந்தநாளில் மிகப்பெரிய பரிசாக நான் கருதுவது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முதல்வரின் லட்சியதை நிறைவேற்றுவதாகத்தான் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT