Published : 29 Nov 2024 05:56 AM
Last Updated : 29 Nov 2024 05:56 AM

சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வகுக்க ஆய்வு: கருத்து தெரிவிக்க ‘கும்டா’ வேண்டுகோள்

சென்னை: ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வகையில் சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை வகுப்பது தொடர்பான ஆய்வில் பயணிகள் கருத்து தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும் என சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகளவிலான பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

எனவே பேருந்து சேவையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதற்காக டிஐஎம்டிஎஸ் என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், மெட்ரோ, மின்சார ரயில் நிலையங்களில் மாநகரப் பேருந்து, பிற அரசு போக்குவரத்துக்கழக பேருந்து, தனியார் பேருந்து, ஷேர் ஆட்டோ, வாடகை வாகனம் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளிடம் வரும் ஜன.15-ம் தேதி வரை கருத்து கேட்கப்படும்.

இத்துடன் பேருந்தில் ஏறி இறங்கும் பயணிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு பேருந்து நிலையத்தில் இருந்தும் வெளிவரும் பேருந்துகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதோடு, மருத்துவ வசதிக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஓட்டுநர்களின் நேர்காணல்களும் பதிவு செய்யப்படவிருக்கின்றன.

எனவே, இந்த ஆய்வுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் ஒரே பயணச்சீட்டில் பயணிக்க ஏதுவான திட்டத்தை வகுக்கவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x