Published : 29 Nov 2024 01:29 AM
Last Updated : 29 Nov 2024 01:29 AM
சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பொதுத்துறைச் செயலர் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட சட்டவிரோதமாக கூடுதலாக மணல் அள்ளப்பட்டு, கோடிக்கணக்கில் விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக்கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகா்ரிகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆகியோர், இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது என சுட்டிக்காட்டினர். அப்போது இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் மனுதாரர் என்ற முறையில் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர் இன்று (நவ.29) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT