Published : 29 Nov 2024 01:15 AM
Last Updated : 29 Nov 2024 01:15 AM
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, ப்ரோபா-3 எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கிமீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தி சூரியனின் புற வெளி கதிர்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அந்த இரு செயற்கைக் கோள்களும் 150 மீ தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப உள்ளன.
அதன்படி, வரும் டிச.4-ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து மாலை 4.08 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்றும், பார்வையாளர்கள் அதனை நேரில் காண்பதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் இஸ்ரோவின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT