Published : 28 Nov 2024 09:09 PM
Last Updated : 28 Nov 2024 09:09 PM
சென்னை: மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி திருத்த தீர்மானத்திற்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரிய ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிசாமி, இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், "2022-23ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெற 2021-22ம் ஆண்டில் சொத்து வரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள் நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்த வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது. அதேபோல மத்திய அரசின் 'தூய்மை இந்தியா திட்டம்' மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை தமிழக அரசு இதை கடைபிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்கு கொடுக்கப்பட வேண்டிய மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அத்துடுன் தூய்மை இந்தியா திட்டம், அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மத்திய அரசு இப்படி கடுமையான விதிகளை 15-வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது அவர்களுடன் பழனிசாமி நட்புறவுடன் இருந்தார்.
தற்போது தமிழக அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து உள்ளாட்சி அமைப்புகளை எல்லாம் திவாலாக்கிய பழனிசாமி, அரசியல் ஆதாயத்திற்காகவும் தங்கள் கட்சியின் கலவர ஆய்வுக் களோபரங்களை மறைத்து திசை திருப்பவும் மக்கள் மீது அக்கறை உள்ளதைப் போல நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 15-வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியதன் காரணமாக வேறு வழியின்றி, முதல்வர் ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக, மிக குறைந்த அளவு சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டார். அந்த வகையில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் சொத்து வரியானது மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT