Published : 28 Nov 2024 08:55 PM
Last Updated : 28 Nov 2024 08:55 PM
மதுரை: நவீன தொழில்நுட்பம், சிறந்த உத்திகளை பின்பற்றி கட்டிய புதிய பாம்பன் பாலம் பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதிய பாம்பன் பாலம் பல்வேறு புதுமையான மற்றும் பாதுகாப்பான சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாம்பன் ரயில் பாலம் 2.05 கி.மீ. நீளத்திற்கு கடலின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கப்பல் போக்குவரத்திற்காக செங்குத்தாக மேலே எழும்பி செல்லும் வகையில் நவீன பால அமைப்பு 72 மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஒரு சர்வதேச ஆலோசனை நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய, இந்திய மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வடிவமைப்பு சென்னை இந்திய தொழில் நுட்ப பல்கலைக்கழக வல்லுனர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவன வடிவமைப்பு என்பதால், ரயில்வே வாரிய அறிவுறுத்தலின்படி ரயில்வே துறையும், ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பும் தேவையான தொழில் நுட்ப ஆய்வுகளை செய்தன. மேலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த வடிவமைப்பை தீவிர ஆய்வு செய்ய மும்பை இந்திய தொழில் நுட்ப பல்கலைக்கழக வல்லுனர்களை ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இருமுறை தொழில் நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இவ்வடிவமைப்பை தெற்கு ரயில்வே அங்கீகரித்தது. எனவே, இந்த புதிய பாம்பன் பாலம் பிரபல சர்வதேச ஆலோசனை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவின் இரண்டு முக்கிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக வல்லுநர்கள் ஆய்வு செய்து அங்கீகரித்த பின்பே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பு செய்த மாறுதல்களையும் இந்தியாவின் இரு பிரபல தொழில் நுட்ப பல்கலைக்கழக வல்லுனர்கள் ஆய்விற்குப் பிறகு தெற்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது.
பாலத்தின் செயல் திறனுக்கு இணைப்பு பற்ற வைப்புகள் (வெல்டிங்) முக்கியம் வாய்ந்தவை. இந்த பற்றவைப்புகள் நவீன அல்ட்ராசானிக் இயந்திரம் மூலம் 100% சரிபார்க்கப்பட்டுள்ளது. திருச்சி வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் பற்றவைப்புகளை 100% சரி பார்த்துள்ளது. அதன் பிறகு தெற்கு ரயில்வே நிர்வாகம் பற்ற வைப்புகளை சரி பார்த்தது. உலகத்தில் அதிகளவில் துருப்பிடிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாலி சிலிக்கான் வகை பெயிண்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்த வடிவமைப்பை 35 ஆண்டு துருப்பிடிக்காமல் பாதுகாக்கும்.
துரு பிடிக்காமல் தடுக்க தரமான இரும்பு, தரமான கான்கிரீட் வடிவமைப்புகள், இணைப்புகளில் பலமான பற்றவைப்புகள், பாதைகளில் நெகிழியிழை அமைப்புகள், எளிதில் ஆய்வு செய்யும் வசதி, கைப்பிடி அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. பாலம் நவீன தொழில் நுட்பத்துடன் சிறந்த கட்டுமான உத்திகளுடன் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு முழுமையாக பின்பற்றப்படும்” என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தனது அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார். அதன் விவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடுகள் - பரிந்துரைகள் என்னென்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT