Published : 28 Nov 2024 07:32 PM
Last Updated : 28 Nov 2024 07:32 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால், அனைத்து துறை அதிகாரிகளும் பணியில் இருக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
புயல் சின்னம் புதுவையை நோக்கி நெருங்கி வருவதின் காரணமாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் குலோத்துங்கன் கூறியது: ''நாளை முதல் இரண்டு நாட்கள் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் புதுச்சேரியில் கனமழை பெய்ய இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளுக்கு சென்று தங்கள் பணிகளை தொடர உத்தரவிட்டுள்ளேன்.
அனைத்து பாதுகாப்பு மையங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுப் பணித்துறை மற்றும் மின்துறை ஆகிய துறைகள் தங்கள் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அரை அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் செவி சாய்க்க தெரிவித்துள்ளேன். மக்கள் கேட்கும் உதவிகளை செய்து தரவும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பால் பாக்கெட் தடையின்றி விநியோகம் செய்ய அந்தந்த துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 40 பேரும் பல்வேறு பகுதிகளை கண்காணிப்பார்கள். தேவைப்பட்டால் கூடுதலாக மீட்பு படை அழைக்கப்படுவார்கள். சுகாதாரத் துறை அதிகாரிகள் கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து துறை அதிகாரிகளும் அந்தந்த பகுதிகளில் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT