Published : 28 Nov 2024 05:24 PM
Last Updated : 28 Nov 2024 05:24 PM
சென்னை: பொதுமக்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், அவை நிராகரிக்கப்படுவதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள், துறைகளின் செயலர்களுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: “மாவட்ட ஆட்சியர்களிடம் ‘மக்கள் குறைதீர் நாளில்’ அதிகளவில் கோரிக்கை மனுக்களை மக்கள் வழங்குகின்றனர். அதேபோல், அரசுத்துறைகளின் அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையிலான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. ஆன்லைனிலும், நேரடியாகவும் பெறப்படும் இந்த கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அரசின் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மனுக்கள் பெறப்பட்ட உடனோ அல்லது அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ மனு பெறப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரரின் கோரிக்கையானது பெறப்பட்ட நாளில் இருந்து, அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும். கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்திருந்தால், அந்த மனு மீதான நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். ஒருவேளை சில காரணங்களுக்காக மனு மீதான தீர்வுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், யார் மனு அளித்தாரோ அவருக்கு, கடிதம் மூலம் தீர்வு காண எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க முடியாத சூழல் கண்டறியப்பட்டால், அதுகுறித்த சரியான காரணத்தை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை அனைத்து துறைகளின் செயலர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அவ்வபோது அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருப்பினும், அந்த அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதில்லை என தெரிய வருகிறது.
மேலும், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றமும், பொதுமக்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அரசின் உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதுடன், மாதாந்திர அறிக்கையும் அளிக்க வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT