Last Updated : 28 Nov, 2024 03:28 PM

2  

Published : 28 Nov 2024 03:28 PM
Last Updated : 28 Nov 2024 03:28 PM

"அரசியல் ஆதாயங்களுக்காக விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைக்க வேண்டாம்" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கோவை: அரசியல் ஆதாயங்களுக்காக, விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என முதல்வருக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும். எனவே, தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்த முடியாது என முதல்வர் மத்திய எம்எஸ்எம்இ அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாரம்பரிய கைவினைஞர்கள், கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 18 வகையான பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தால் பயன் பெறலாம்.

நாடெங்கும் கிராமங்கள், நகரங்களில் உள்ள கைவினைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். பல மாநிலங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பல லட்சக்கணக்கான கைவினைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய பல்லாயிரம் கைவினைஞர்கள் பேரார்வத்துடன் இருக்கும் நிலையில், அதில் தனது அரசியல் விளையாட்டை திமுக நடத்துவது வேதனை அளிக்கிறது.

சாதி அடிப்படையான தொழில்முறையை ஊக்குவிக்குகிறது என முதல்வர் காரணம் கூறியிருக்கிறார். இந்தியாவில் எந்தத் தொழிலையும், யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்கள் தொழில்துறையில் நுழைய, சாதிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எந்த பின்னணியும் இல்லாமல், தொழில் துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு மோடி அரசின் ஸ்டார்ட்அப் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. முத்ரா கடனுதவி திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அளிக்கும் திட்டத்தையும் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் பல்வேறு கைவினைத் தொழில்கள் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உதவி செய்யவே விஸ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நான் செல்லும் இடங்களில் எல்லாம், கைவினைஞர்கள் என்னை சந்தித்து, விஸ்வகர்மா திட்டம், செயல்படுத்தப்படாதது குறித்து வேதனை தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் முதல்வரை நேரில் சந்தித்தபோதும் அதை வலியுறுத்தினேன். எனவே, திமுக-வின் அரசியல் ஆதாயங்களுக்காக, இத்திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x