Published : 28 Nov 2024 02:09 PM
Last Updated : 28 Nov 2024 02:09 PM
சென்னை: “கடந்த 2016-2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இதனால், 3,38,380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன,” என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. தொலைநோக்குப் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் தமிழகத்தின் கிராமங்கள் துரித வளர்ச்சியை அடைந்தன. விவசாய நிலப்பரப்பு விரிவடைந்தது. விவசாயிகள் தன்னிறைவு பெற்றனர்.
2010-2011-ம் ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 77,158 இலவச வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துச் சாதனை படைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துப் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. அதற்காக மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2016-2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது.
வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி அக்கறையோடு செயலாற்றிவரும் தமிழக முதல்வரின் ஆலோசனைகளால் வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால், 3,38,380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT