Published : 28 Nov 2024 01:46 PM
Last Updated : 28 Nov 2024 01:46 PM
சென்னை: கடலூர் கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் 6 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடலூர் பகுதியில் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் சென்ற போது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் நீச்சலடித்து நடுக்கடலில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். தனியார் துறைமுகத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இரண்டாவது நாளாக தவித்து வரும் அவர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும் புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT