Published : 28 Nov 2024 10:48 AM
Last Updated : 28 Nov 2024 10:48 AM
சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடிப் பயிர்களில் 52 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீரை வடிய வைப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததாலும், நாளை முதல் கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதாலும் அந்த பயிர்கள் அழுகும் தருவாயில் உள்ளன.
காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் கூடுதலான செலவு செய்து வளர்த்த பயிர்கள் அழியும் நிலையில் இருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு குறுவை, சம்பா ஆகிய இரு பருவ பயிர்களும் இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பெருமளவில் செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் நடப்பு சம்பா பயிரும் பாதிக்கப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதுடன், மீள முடியாத கடன் சுமையிலும் சிக்கிக் கொள்வார்கள்.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் போக்கி, அவர்களின் துயரைத் துடைக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT